Skip to main content

பெண்கள் அதிகாரம்!

விபத்தில் இறந்த பெண் தொழிலாளியின் சொத்துகளை மீட்டுத் தந்த பெண்கள்!

வாடிப்பட்டி பகுதியின் கிராமம் ஒன்றைச்சேர்ந்த பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகாரை வாடிப்பட்டி CPI ML கட்சியிடம் அளித்தார். அவரின் தங்கை 17 வயதில் படிப்பு முடித்து 28 வயது வரை அருகாமை ஊர் மருத்துவர் ஒருவரிடம் தாதியாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. +2 பாடத்துடன் வேலைவாய்ப்புப் பயிற்சியாக தாதிகளுக்கானப் படிப்பை முடித்த அவர், பிரசவம் பார்க்கும் அளவுக்கு தொழிலில் முன்னேறினார். அந்த மருத்துவரின் மருத்துவமனையிலேயே தங்கி அதனை நிர்வகித்து வந்தார். சென்ற ஆண்டு சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

அவரின் சம்பளம், கணக்கு வழக்கு, நகைகள் என்று அனைத்து விவரங்களையும் மேற்படி மருத்துவர்தான் பார்த்து வந்தார். தாதியின் மரணத்துக்குப் பின்பு அவரைச் சந்திக்க தாதியின் அக்கா சென்றிருக்கிறார். தங்கைக்குத் தர வேண்டிய பாக்கிகளைக் கோரியிருக்கிறார். தங்கை வைத்திருந்த நகைகள் எங்கே என்று கேட்டிருக்கிறார். மருத்துவர், உங்கள் தங்கைதான் எனக்குத் தர வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, விபத்து மரணத்துக்கான காப்பீடு பணத்தையும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர் பெற்றுக்கொண்டுவிட்டார்.

மருத்துவர் ஏமாற்றுகிறார் என்று உணர்ந்த அக்கா கட்சியிடம் புகார் அளித்தார். சில மாதங்கள் வழக்கமான முறைகளைக் கட்சி பயன்படுத்திப் பார்த்தது. பிரச்சனை என்னவென்றால், அக்காவிடம் தன் தங்கையின் படிப்பு, வேலைக்கு சேர்ந்தது, செய்த வேலை,சேமிப்பு, பெற்ற சம்பளம் என்று எதற்குமான ஆதாரமும் இல்லை. இருக்கின்ற ஆவணங்களும் மருத்துவரின் வசம். இரண்டு வழக்குரைஞர்களை மாற்றியும் கூட எந்த முன்னேற்றமும் இல்லை.

வாடிப்பட்டி கட்சி வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தது. மருத்துவர் ஏமாற்றுகிறார் என்று தெரிகிறது. ஆனால், பிடிமானம் இல்லையே என்று யோசித்தவர்கள் பெண்களைத் திரட்டிக்கொண்டு மருத்துவரைச் சந்திக்க முடிவு செய்தனர்.
இன்று அந்த சந்திப்பு நடந்தது. முதலில் முரண்டு பிடித்த மருத்துவர் திரண்டுவந்த பெண்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. இறந்துபோன பெண்ணின் நகைகளைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டார். ‘பிடிமானம்‘ இல்லாது திரிந்த அக்காவிற்கு ஏறக்குறைய 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திரும்பக் கிடைப்பதே போதும் என்று பட்டது.
அந்த அக்கா இளம் வயதில் கணவனை இழந்த கல்லுடைக்கும் தொழிலாளி. குவாரி வெடிவிபத்தில் கணவனை இழந்து, அதற்கான இழப்பீடும் பெறாமல், பிள்ளைகளை வளர்க்கும் துன்பத்தில் உழன்று கொண்டிருப்பவர்.

அவரின் திருப்தியே தங்களின் திருப்தி என்று பெண்கள் வெற்றிக்கொடியுடன் திரும்பினர்.

பெண்கள் அதிகாரம்!

Comments